Skip to main content

கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? - விவரிக்கிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 08/04/2023 | Edited on 17/04/2023

 

 Dr Arunachalam health tips for summer

 

இந்தக் கோடை காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து  டாக்டர். அருணாச்சலம் விரிவாக விளக்குகிறார்.

 

வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. எவ்வளவு குளிரை நாம் சந்தித்தோமோ, அதைவிட அதிக வெயிலுக்கு நாம் தயாராக வேண்டும் என்று அரசாங்கம் எச்சரிக்கிறது. இந்தக் கோடை காலத்தில் தண்ணீரை சுற்றியே நம்முடைய வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. நீர் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம். சுத்தமான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். அசுத்தமான தண்ணீரால் பல நோய்கள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

 

கோடைக் காலத்தில் காலரா போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று நாம் நம்பினாலும் அதனை காய்ச்சித்தான் குடிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை மட்டுமே நாம் குடிக்க வேண்டும். ஆபீஸில் ஏசியில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை தினமும் அருந்த வேண்டும். நீர் மோர், சாலட் சாப்பிடுவது நல்லது. சிறுநீர் தொடர்ந்து மஞ்சளாக வெளியேறினாலோ, நீண்ட நேரமாக சிறுநீர் வரவில்லை என்றாலோ நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். 

 

சிலருக்கு நீர் பற்றாக்குறையால் சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தண்ணீரால் உடலை அவ்வப்போது கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கோடைக் காலத்தில் அதிகம் ஜீன்ஸ் அணியாமல் இருப்பது நல்லது. வியர்வையை உறிஞ்சும் வகையிலான துணிகளை உடுத்துவது நல்லது. துண்டை வைத்து உடல் பாகங்களை அவ்வப்போது கழுவி துடைத்தால் உடல் சுத்தமாக இருக்கும். சிறுநீரில் கல் ஏற்படும் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு அதிகம் தண்ணீர் குடிப்பது தான் தீர்வு. ஞாயிற்றுக்கிழமைகளிலும் உணவில் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.