சர்க்கரை நோயாளிகள் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து டாக்டர். அருணாச்சலம் விளக்குகிறார்
சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறு. மாத்திரைகள் எடுத்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து சர்க்கரை நோயாளிகளுக்கு முன்னேற்றம் தெரியும். மாதம் ஒருமுறை ரத்தக் கொதிப்பை மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும். நீண்ட தூரம் நடந்து வரும்போது ரத்தக் கொதிப்பு அதிகமாகவும், சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு குறைவாகவும் இருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மாத்திரை எடுக்கும்போது மயக்கம் வருவது, தூக்கமில்லாமல் போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தாங்களாகவே பரிசோதனை செய்து தாங்களாகவே மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது தவறு. இதனால் பல பக்கவிளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். சிலருக்கு தூங்கி எழும்போதே மயக்கம் ஏற்படும். இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவரிடம் வருவார்கள். மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள்.
உப்பு, ஊறுகாய் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். இனிப்பு, பழங்கள், கிழங்குகள் ஆகியவை தான் சர்க்கரையை அதிகரிக்கக் கூடியவை. கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டால் கூட சர்க்கரையின் அளவு கூடும். நடைப்பயிற்சியின் மூலம் சர்க்கரையைக் கரைக்க முயற்சி செய்யலாம். சில நோயாளிகள் லாஜிக்கலாக யோசிக்கக் கூடியவர்கள். ஆனாலும் தாமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது தான் எப்போதும் சிறந்த நடைமுறை.