Skip to main content

முட்டி வலி ரொம்ப ஆபத்து.. இதையெல்லாம் அதிகம் செய்யாதீர்கள் - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Dr Arunachalam about Knee Pain 

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு பாதிப்பாக இப்போது மூட்டு வலி இருக்கிறது. அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை விரிவாக விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம் அவர்கள்...

 

நம்முடைய உடல் எடையைத் தாங்குவதே முட்டி தான். வண்டி ஓட்டும்போது பலர் செய்யும் சர்க்கஸ் அவர்களுடைய மூட்டுகளை பாதிக்கிறது. பேருந்துகளில் இருந்து குதிப்பது, ரயில்களில் இருந்து குதிப்பது போன்ற செயல்கள் அனைத்துமே மூட்டுகளைத் தான் பாதிக்கும். முந்தைய காலங்களில் மாடி வீடுகள் அதிகம் இல்லை. இப்போது மாடிப்படி ஏறுவது அதிகமாகியுள்ளது. கபடி போன்ற அப்போதைய விளையாட்டுகளை விட இப்போதைய விளையாட்டுகளான கிரிக்கெட், கால்பந்து போன்றவை அதிக காயங்களை ஏற்படுத்தக் கூடியவை. 

 

மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால், இருசக்கர வாகனங்களின் வேகம் குறைந்து, அதனால் மருத்துவமனைகளில் எலும்பு முறிவு நோயாளிகள் தற்போது குறைந்துள்ளனர். மற்ற நாட்களில் அவர்கள் வேகமாகச் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு அதன் மூலம் எலும்பு முறிவு அதிகம் ஏற்படுகிறது. பெரிய அளவில் வலி இருந்தால் எலும்பு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கான கால்சியம் சத்து அவசியம்.

 

நம்முடைய நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகம் இருப்பதில்லை. ஆண் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் இருந்தாலும் கால்சியம் சத்து இருப்பதில்லை. பால், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவுகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கடல் உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும். இறால், நண்டு போன்றவை கால்சியம் சத்தை அதிகம் வழங்கும். குழந்தைகளின் நடை மாறினால் பெற்றோர் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்கின்றனர்.

 

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவினாலும் வலிகள் ஏற்படலாம். தொண்டை பாதிப்புகளுக்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டாலும் மூட்டு வலி, இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காயங்கள், அதிகமான உழைப்பு, உடல் பருமன் ஆகியவையும் மூட்டு வலியை ஏற்படுத்தும். உடல் எடையைக் குறைக்காவிட்டால் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு ஆகிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.