தூக்கம், உணவு முறை, உடல் வலி போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்த விளக்கங்களை டாக்டர் அருணாச்சலம் நமக்கு அளிக்கிறார்.
தசைப் பிடிப்பை கேஸ் பிரச்சனை என்று கூறுவதைத் தமிழர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். சமீப காலங்களில் போலி மருத்துவர்கள் பலர் உலா வந்ததன் தாக்கம்தான் இது. வாய்வு காய்கறிகள் என்று இவர்கள் கூறும் உருளைக்கிழங்கு, வாழைக்காய் ஆகிய அனைத்துமே கார்போஹைட்ரேட் நிறைந்தவை. அவற்றை உண்ணும்போது ஆழ்ந்த தூக்கம் வரும். தூங்கி எழும்போது தசை வலி ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் இந்த வலி அதிகம் ஏற்படும். படுக்கும்போது சரியான முறையில் படுக்காமல் இருப்பதாலும் வலி ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வலி ஏற்படுவதற்கு அவர்களுடைய சர்க்கரை நோய் தான் காரணம். காலையில் எழுந்தவுடன் ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் செய்யாமல் இருப்பதும் வலி ஏற்படுவதற்கு ஒரு காரணம். அந்த எக்சர்சைஸ் செய்த பிறகு நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். ஏப்பம் வருவது வெறும் வாயு பிரச்சனையால் மட்டும் அல்ல. சாப்பிட்ட உடனேயே படுப்பதால் உணவுக்குழாய் பிரச்சனைகள் ஏற்படலாம். வாய்வு காய்களால் எந்த நோயும் ஏற்படாது. அவற்றை உண்ணுவதால் கார்போஹைட்ரேட்டை நாம் அதிகம் எடுத்துக்கொண்டதாகவே ஆகும்.
மட்டன், சிக்கன் சாப்பிடும்போது சோற்றையும் அதிகமாக நாம் சாப்பிடுகிறோம். அன்றைய அதீத களைப்புக்கு அதுதான் காரணம். எதையுமே முடியவில்லை என்று நாம் சொல்லக்கூடாது. தினமும் ஒரு மணி நேர உடற்பயிற்சி என்பதை கல்லூரிக் காலத்திலிருந்தே ஒரு வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பது, லேப்டாப் பார்ப்பது தவறு. ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் செய்தாலே தசை வலிகள் வராது. சோற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடல் பருமனையும் இதன் மூலம் குறைக்க முடியும்.