உடல் எடை அதிகமாக இருப்பதால் குழந்தையின்மை உருவாக வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு..
உடல் பருமன் கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ளுதலை பாதிக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கும் கடின உழைப்பு செய்பவர்களுக்குமான வித்தியாசத்தை பார்த்தால் கடின உழைப்பாளிகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிகம் சுரக்கும். தூக்கமில்லாமல் மன அழுத்தம் நிறைந்திருப்பவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அதனால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்.
உடல் உழைப்பு குறைவு என்பது உட்கார்ந்து வேலை செய்கிற எல்லாருக்குமே பொருந்தும் தான். அதனால் உடல் எடை அதிகரிக்கும்; அதனால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். சரி செய்ய உடல் உழைப்பு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அப்போது இயல்பாகவே டெஸ்டோஸ்டிரோன் அதிகம் சுரக்கும். இதே போல பெண்களுக்கும் உடல் பருமன் அதிகமானால் பாலிசிஸ்டிக் ஒவாரியன் நோய் ஏற்படும். கருமுட்டை எல்லாம் கூழ்முட்டை ஆகிடும்.
விலங்குகளிலிருந்து மனிதன் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்ட முடியுமென்றால் உழைப்பால் மட்டுமே முடியும். எனவே மனிதன் உழைக்கப் பிறந்தவன். ஆண், பெண் இருபாலருமே தன்னுடைய உடல் உழைப்பினை உயர்த்தும் பொழுது இருவருமே ஆண்மைத்தன்மை மற்றும் பெண்மைத்தன்மையை அடைய முடியும். குழந்தை பிறப்பில் சிக்கல் உருவாகாது.