பற்களில் இருக்கும் அழுக்கு, அதை எவ்வாறு நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பல் மருத்துவர் அருண் கனிஷ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பற்களில் உள்ள அழுக்கு என்பது வெளிப்புறத்தில் இருந்தும் வரலாம். பற்கள் உருவாகும்போது ஏற்படும் மாற்றத்தாலும் வரலாம். வெளிப்புறத்தில் இருந்து வரும் அழுக்கு என்பது டீ, காபி, கலர் நிறைந்த உணவுப் பொருட்கள், ஜூஸ் ஆகியவற்றை நாம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும். சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தாலும் பற்களில் அழுக்கு ஏற்படும். இதனால் ஏற்படும் அழுக்கை நீக்குவது மிகவும் கடினம். டென்டல் கிளீனிங் மூலம் பற்களில் உள்ள அழுக்குகளை நாம் நீக்கலாம்.
ஆனால் இதற்கு சற்று அதிக காலம் பிடிக்கும். ஏனெனில் அந்த அழுக்கு என்பது பற்களில் ஆழமாகப் படிந்திருக்கும். சிகரெட் மற்றும் புகையிலை பழக்கம் இருப்பவர்கள் அந்தப் பழக்கங்களை நிறுத்தினால் மட்டும் தான் நீண்ட கால நன்மை ஏற்படும். இல்லையெனில் திரும்பத் திரும்ப அழுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். குழந்தை வயிற்றில் இருக்கும்போது சில ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை தாய் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் குழந்தை வளர்ந்து 8 வயது ஆகும் வரை இது இருக்கும்.
நாம் குடிக்கும் தண்ணீரில் ஃப்ளோரின் அதிகம் இருந்தால் பற்களில் இந்த வகையான அழுக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகபட்சமான பாதிப்பு ஏற்படும்போது பற்களுக்கு இடையில் ஓட்டை இருப்பதுபோல் இது வெளிப்படும். பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இது காட்சியளிக்கும். பற்களின் தோற்றமே இதன் மூலம் மாறும். குழந்தைகள் தங்களுடைய 8 வயது வரை ஃப்ளோரின் நிறைந்த தண்ணீரைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தப் பிரச்சனையை குணப்படுத்த பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. சிலருக்கு குடும்ப வரலாறு காரணமாகவும் இந்தப் பிரச்சனை ஏற்படும். பற்களில் அழுக்கு ஏற்படுவதற்கான காரணங்களை நாம் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை வழங்கும்போது நிச்சயமாக குணப்படுத்த முடியும்.