பொதுவாக மனிதர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும்; கஷ்டங்கள் இல்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். நிம்மதியாகத் தூங்க வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால் பலருக்கு சரியாகத் தூக்கம் வராது. தூக்கத்தின்போது நிறைய கனவு காண்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தையும், 12-ஆம் பாவத்திலுள்ள கிரகங்களையும் நாம் பார்க்கவேண்டும். 12-ஆம் வீட்டில் பாவகிரகம் இன்னொரு பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது இன்னொரு பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் பாவகிரகங்கள் இருந்தால், பாவகர்த் தாரி யோகம் உண்டாகும். அதனால் இரவில் தூங்கும்போது ஆழ்மனம் வேலைசெய்து, அந்த மனிதருக்கு முற்பிறவி ஞாபகங்களும், மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்களும் கனவுகளாக மாறி அதிகாலை வேளையில் தொல்லைகளைத் தரும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு 6, 8, 12-ல் சனி இருந்து, அந்த சந்திரன் 11, 6, 8-ல் இருந்தால், அவருக்கு அதிகாலை மூன்று மணிக்குப் பிறகு உருப்படியில்லாத கனவுகள் அதிகமாக வரும். அதனால் அவரால் தூங்க முடியாது.
ஒருவர் வீட்டில் வடக்கு திசையில் அவசிய மற்ற குப்பைகள் அல்லது பொருட்களைத் தேக்கி வைத்திருந்தால், அங்கிருப்பவர்களுக்கு சரியாகத் தூக்கம் வராது. வீட்டின் வடமேற்கு திசையில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந் தால் அங்கிருப்பவர்களுக்கு பல நோய்களும் வரும். பயம் உண்டாகும். பயத்தை உண்டாக்கும் கனவுகள் வரும். அந்த வீட்டின் பூஜையறை மேற்கு திசையில் வடமேற்கில் இருந்து, பூஜை செய்யப்படும் கடவுளின் முகம் கிழக்கு பார்த்தவாறு இருந்தால், அங்கிருப்பவர்களுக்கு சரியாகத் தூக்கம் வராது. பல காரியங்கள் நடப்பதற்கு முன்பே கனவில் அவர் களுக்குத் தோன்றும். அதனால் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
ஒரு ஜாதகத்தில் 12-ல் ராகு, சனி இருந்து, லக்னத்தில் செவ்வாய் அல்லது சூரியன் இருந்தால், அவர் கடுமையாக உழைத்துவிட்டு வீட்டிற்கு தாமதமாகவந்து படுப்பார். தான் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி அவர் தூக்கத்தில் நினைப்பார். அவருக்கு அப்போதும் தான் வேலை செய்துகொண்டிருப்பதைப்போல தோன்றும். அதனால் தூக்கம் கெட்டுவிடும். அதுவும் அதிகாலை வேளையில் கனவுகள் தோன்றும். 12-ல் இருக்கும் ராகு, சனி அவருடைய தூக்கத்தில் பல சிந்தனைகளையும் உண்டாக்குவர்.
ஒருவர் ஜாதகத்தில் தேய்பிறைச் சந்திரன் 11-ல் இருந்து, 12-க்கு அதிபதி லக்னத்தில், லக்னாதிபதியுடன் இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங் களையும் அனுபவித்திருப்பார். அதனால் பணம் வந்து சேர்ந்தபிறகும், அது தன்னிடம் இருக்குமா அல்லது கையைவிட்டுப் போய் விடுமா என்ற எண்ணம் எப்போதும் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். தான் அனுபவித்த கஷ்டங்கள் மீண்டும் தன் வாழ்க் கையில் வருவதைப்போல கனவுகாண்பார்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் புதன், 2-ல் செவ்வாய், 6-ல் சனி இருந்தால் அந்த ஜாதகர் கடுமையாக உழைப்பார். பலருக்கும் நன்மைகள் செய்வார். ஆனால் அவரை அவருக்கு நெருக்கமானவர்கள்கூட ஏமாற்றி விடுவார்கள். அதனால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. அதுவும் அதிகாலை வேளையில் படிக்கட்டு, இருட்டறை, நீரில் மாட்டிக்கொண்டிருப்பது... இப்படிப்பட்ட கனவுகளைக் கண்டுகொண்டிருப்பார்.
லக்னத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் இருந்து, சந்திரன் 11-ல் இருந்தால், இரவு நேரத்தில் காற்று சரியாக வராவிட்டால் அவருக்குத் தூக்கம் கெட்டுவிடும். பல கனவுகளையும் காண்பார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் சரியில்லா மலிருந்தால், சந்திரன், சனியுடன் 12-ல் இருந்தால் அல்லது சந்திரனை சனி பார்த்தால், அவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது சரியாகத் தூக்கம் வராது. பல கனவுகள் காண்பார். ஒருவர் தான் படுக்கும் இடத்தில் பல பொருட் களையும் பரப்பி வைத்திருந்தால் அல்லது தேவையற்ற பொருட்களை கட்டிலுக்கு அடியில் போட்டு வைத்திருந்தால் அவருக்கு ராகு, சந்திரன் சரியில்லை என்று பொருள். அதனால் அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.
ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் 2, 6, 11-ல் இருந்து அந்த கிரகங்கள் சந்திரனுக்கு கேந்திரமாக இருந்தால், அதாவது- சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அதிலும் குறிப்பாக சந்திரன், லக்னம் 6, 8, 11-ல் இருந்தால், அவர் எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்வதைப்போல கனவுகாண்பார். சில நேரங்களில் அவருக்கு விந்து வெளிப்பட்டு தூக்கம் கலைந்துவிடும். வீட்டில் நீர் பருகும் பானை தெற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்தால், அந்த வீட்டில் முன்னோர்களின் தோஷம் இருக்கும். அவர்கள் கனவில் வருவார்கள்.அவர்கள் பேசுவதைப்போல் இருக்கும். அதனால் தூக்கம் வராது.
பரிகாரங்கள்
படுப்பதற்கு முன்பு வாயை நன்கு கழுவவேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும். நீர் பருகவேண்டும்.
கனவுகள் அதிகமாக வந்தால் நான்கு பூண்டுத்துண்டுகளை தலையணைக்குக்கீழே வைத்துப் படுக்கவேண்டும். (உடைந்த பூண்டு).
ஒரு சிறிய சுத்தியை தலையணைக்குக்கீழே வைத்துக்கொண்டு படுக்கலாம்.
தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும். அப்போது தன் விருப்பத்திற்குரிய கடவுளின் மந்திரத்தைக் கூறவேண்டும்.
ஆஞ்சனேயரின் பெயரைக் கூறிவிட்டுப் படுப்பது நல்லது.
வெளிர்நிற ஆடைகளையே அணிய வேண்டும்.
படுக்கையறையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதை மூடிவிட்டுப் படுக்கவேண்டும்.
வீட்டின் தென்மேற்கில் நீர் இருக்கக்கூடாது. படுக்கும் இடத்தின் வடமேற்கில் நீர் பிடித்து வைக்கக்கூடாது.