ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் உள்ள இந்திய மக்கள் இந்த பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வரும் போதிலும் இதன் தொடக்கம் மகாராஷ்ட்டிரா மாநிலம் தான். அங்கு மராட்டிய மன்னர் சிவாஜி ஆட்சி காலத்தில் இருந்தே இந்த விழா கொண்டாடப்படுகிறது. இன்றைக்கும் மகாராஷ்ட்டிராவில் கன்பத்தி என்ற பெயரில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கணபதி ஊர்வலத்தில் அங்கு ஆண்கள், பெண்கள் நடனமாடி விநாயகரை கடலுக்கு எடுத்து செல்லுவது கண்கொள்ளா காட்சி.
தமிழகத்தில் இன்று 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் பொது இடங்களில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. புதுவித கொண்டாட்டமாக சினிமா கதாபாத்திரங்களில் எல்லாம் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மக்கள் சதுர்த்தி தினத்தை வழிபடும் நாள் என்பதனையும் கடந்து மக்களின் கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். இது தவிர வீடுகள்,கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த 2 வருடங்களாக கொரொனா காரணத்தால் களையிழந்து காணப்பட்ட சதுர்த்தி விழா இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சியில் பழமையான மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நாளான இன்று காலையில் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அதில் 75 கிலோ கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையை துணியில் கட்டி மேலே எடுத்து சென்று படையிலிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து வரிசையில் நின்று விநாயகரை தரிசித்தனர். இதுபோல அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருச்சி பீமநகர், பெரியகடைத்தெரு, பாலக்கரை, கருமண்டபம், மிளகுபாறை உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆங்காங்கே விழாக்கள் நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இங்கும் 10 நாட்களாக திருவிழா நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை முதல் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசித்தனர். சதுர்த்தி விழாவையொட்டி தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.