ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்காவிட்டால் உலகிற்கே பிரச்சனை ஏற்படுத்திவிடுமென்று, அமெரிக்க அரசை தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்தும், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மௌலவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர். இதற்கு சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் ஆதரவளிக்கவில்லை. இவ்விரு நாடுகளும் தலிபான் அரசுக்காக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசை அங்கீகரிக்கத் தவறுவது, ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும், பின்னர் இது உலகிற்கே பிரச்சனையாக மாறும் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகீதின், அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.