கரோனா தொற்று குணமாகி வெள்ளை மாளிகை திரும்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படக்காரர்களுக்கு தனது முகக்கவசத்தை கழட்டிவிட்டு போஸ் கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்புக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த 4 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ட்ரம்ப் உடல்நலம் தேறியதால் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த ட்ரம்ப், புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அப்போது, தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்ட ட்ரம்ப், கரோனா வைரஸைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறினார். கரோனா குணமாகி தற்போதே வீடு திரும்பியுள்ள நிலையில், பொது இடத்தில் முகக்கவசத்தை கழட்டிவைத்த அவரின் செயல் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.