தைவானில் பட்டம் விடும் திருவிழாவின்போது மூன்று வயது சிறுமி ராட்சத பட்டதில் சிக்கி வானில் பரந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தைவானின் நான்லியோ கடற்கரையில் பட்டம் விடும் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்தவகையில் தற்போது நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு ராட்சத பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். அப்போது பட்டம் விடும் பகுதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி, பட்டத்தின் வாலில் சிக்கிப் பட்டதோடு இழுத்துச் செல்லப்பட்டார். திடீரென பட்டத்துடன் வானில் பறந்த சிறுமியைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காற்றில் சில மீட்டர் உயரம் மேலே சென்ற அந்தப் பட்டம், காற்றின் வேகத்தால் தொடர்ந்து பறந்துகொண்டே இருந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த அந்தச் சிறுமி அழுது கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பயத்திலும் பட்டத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிறுமி, பட்டத்துடனேயே சில நிமிடங்கள் பறந்துள்ளார். சிறிது நேரத்தில் காற்றின் காரணமாகப் பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, கீழே காத்திருந்த மக்கள் அவரைப் பத்திரமாகப் பிடித்து மீட்டனர். இதில் சிறுமிக்குச் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதால் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.