கரோனா பாதிக்கப்பட்டதால் பிறந்து ஆறு வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்துள்ளது அமெரிக்காவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1998 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள அமெரிக்காவில், பிறந்து ஆறு வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கரோனாவால் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் பலியானோர் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில், பிறந்து ஆறு வாரங்களே ஆன குழந்தை ஒன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை உட்படுத்தப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில், அந்த குழந்தை நேற்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவே அமெரிக்காவின் மிக இளம்வயது பலி ஆகும்.
இதுகுறித்து கனெக்டிகட் ஆளுநர் நெட் லாமென்ட் ட்விட்டரில் கூறுகையில்,“ கனெக்டிகட் மாநிலத்தின் ஹார்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 6 வார பச்சிளங்குழந்தையின் உயிரை கரோனா வைரஸ் எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு மோசமான நிலையில் வந்த அந்தக் குழந்தையை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்தக் குழந்தையின் இறப்பு மருத்துவர்களையும், கனெக்டிகட் மாநில மக்கள் அனைவரையும் கடும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் குழந்தை இறந்த செய்தி என் மனதை சுக்குநூறாக உடைத்துவிட்டது.அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் கரோனா வைரசுக்கு இளவயதில் பலியான குழந்தை இதுவாகத்தான் இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்