Skip to main content

இந்தியாவின் அஞ்சு; பாகிஸ்தானில் பாத்திமா! - காத்திருக்கும் சட்ட சிக்கல்கள்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Rajastan girl married pakistan person

 

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம், பிவாடி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(35). இவருக்குத் திருமணமாகி அரவிந்த் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அஞ்சு சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா(29) என்பவருடன் பேஸ்புக்கில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அன்று தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுத் தனது பாகிஸ்தான் காதலனைச் சந்திக்கச் சுற்றுலா விசா மூலம் வாகா எல்லை வழியாகப் பாகிஸ்தான் சென்றார்.

 

அப்போது, பாகிஸ்தான் அப்பர்திர் மாவட்டக் காவல்துறையினர் அங்கு வந்த அஞ்சுவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், தனது காதலனைச் சந்திப்பதற்குப் பாகிஸ்தான் வந்ததாகக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அஞ்சுவிடம் இருந்த பயண ஆவணங்களான பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், அஞ்சு மீது நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தான் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.  நஸ்ருல்லா வீட்டில் தங்கிய அஞ்சு, நஸ்ருல்லாவைக் காதலிப்பதாக அங்கு இருந்தபடியே பேட்டி அளித்தார்.

 

இதனையடுத்து பாகிஸ்தான் இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தான் அஞ்சு இந்தியாவில் இருந்து சென்றுள்ளார் என்று செய்திகள் பரவின. அதனைத் தொடர்ந்து, பரவி வந்த செய்திகளுக்கு நஸ்ருல்லா மறுப்பு தெரிவித்திருந்தார். அப்போது அவர் “எங்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. கூடிய விரைவில் அவரது விசா காலாவதியாவதால் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஞ்சு இந்தியா திரும்பிச் செல்லுவார்” என்று கூறினார்.

 

Rajastan girl married pakistan person

 

இந்தச் செய்தி வெளிவந்த நிலையில், பாத்திமா என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய அஞ்சு, தனது காதலன் நஸ்ருல்லாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் கைபர் பக்துன்க்வாவில் உள்ள அப்பர் திர் மாவட்ட நீதிமன்றத்தில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் நஸ்ருல்லாவும், அஞ்சுவும் கைபர் பக்துன்க்வா சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றிருந்தார்கள். அப்போது, பசுமையான தோட்டத்தில் கரம் பிடித்தபடி அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது.

 

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தைச் சேர்ந்த அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனது மகளுடன் எனக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மனரீதியாகப் பிரச்சனை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் இறந்துவிட்டதாகவே கருதுகிறேன். அவள் தனது கணவரையும் குழந்தைகளையும் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது மருமகன் மீது எந்தத் தவறும் கிடையாது. அவர் மிக எளிமையான மனிதர்” என்று கூறினார்.

 

இதற்கிடையில், அஞ்சு  சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர்,  “நான் பாகிஸ்தானில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறேன்.  நான் இங்கே சட்டப்பூர்வமாக வந்திருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்தினரையோ அல்லது எனது உறவினர்களையோ யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியாவில் இந்து மத முறைப்படி அரவிந்த்தை திருமணம் செய்து கொண்ட அஞ்சு, தற்போது பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு மாறி நஸ்ருல்லாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது கணவரிடம் முறைப்படி விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்துள்ள அஞ்சு பல சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்