ரஷ்யா கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர் தாக்குதல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைனின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி ரஷ்யப் படை முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ், மரியபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும், பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த போர்நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஏற்கனவே இரண்டு முறை ரஷ்ய அதிபரிடம் போர் தொடர்பாகவும், இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாகவும் பேசிய பிரதமர் மோடி, இன்று மதியம் மூன்றாவது முறையாக ரஷ்ய அதிபரிடம் தொலைப்பேசி வாயிலாக 50 நிமிடம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, போர் விவகாரம் மற்றும் ரஷ்யாவின் நிபந்தனைகள் தொடர்பாக உக்ரைன் அதிபருடன் புதினை நேரடியாகப் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. பிரதமரின் பேச்சைக் கவனத்தில் கொள்வதாக புதின் உறுதி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.