
அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு எகிப்துக்கு செல்லும் இந்திய பிரதமர் என்கிற வகையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி மோடி எகிப்து சென்றிருந்தார். இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.
நாளை பிரான்சில் நடைபெற இருக்கும் அணிவகுப்பு ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவில் குடியரசு தின விழாவில் எப்படி வெளிநாட்டு தலைவர்கள் பங்கு கொள்கிறார்களோ அதுபோல் பிரான்ஸ் நாட்டின் முக்கிய அணிவகுப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று பிரான்ஸ் சென்றுள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்க இருக்கிறார். இந்திய போர் விமானங்கள், போர்க்கப்பல் ஆகியவை பிரான்ஸ் நாட்டில் இருக்கிறது. அவையும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறது. தொடர்ந்து ஈபிள் டவர் பகுதியில் வானவேடிக்கை நடைபெற இருக்கிறது. அதையும் மோடி கண்டு ரசிப்பார் என்று பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார். 25 வருடங்களுக்கு முன்பு இந்தியா - பிரான்ஸ் இடையே ஸ்டேட்டர்ஜிக் பார்ட்னர்ஷிப் என்ற பெயரில் இருநாட்டு உறவை வலுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் படிப்படியாக உறவுகள் பலப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.