அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் சிட்டிங் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி புதிய அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன்.
அதிபராக இருந்த ட்ரம்பின் கடந்த 4 ஆண்டு காலத்தில், அதிபர் மாளிகையில் நாய்கள் உட்பட எந்த ஒரு செல்லப் பிராணிகளும் வளர்க்கப்படவில்லை. செல்லப்பிராணிகள் மீது ட்ரம்புக்கு ஆர்வம் இல்லாததால் நாய்கள் வளர்ப்பதை அவர் விரும்பியதில்லை. அவர் மட்டுமல்ல; அதிபர் மாளிகையில் இருக்கும் யாரும் செல்லப் பிராணிகள் வளர்க்கவும் அனுமதிக்கவில்லை ட்ரம்ப்!
இந்த நிலையில், ட்ர்ம்பை வீழ்த்தி புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். 'சாம்ப்' மற்றும் 'மேஜர்' எனப் பெயரிட்டு, இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை வளர்த்து வருகிறார் ஜோ பைடன்.
அந்த செல்லப்பிராணிகளில், 'மேஜர்' என்கிற நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் உண்டு. இயற்கை சீற்றங்களின் போது, மீட்புப் பணிகளில் இந்த நாய் ஈடுபட்டு பல உதவிகளைச் செய்திருக்கிறது. அதிபர் மாளிகைக்குள் ஜோ பைடன் குடியேறும் போது, அவருடைய 2 நாய்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்.
பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் 8 நாய்களை அவர் வளர்த்தார். அதிபர் மாளிகையில் ஒபாமா எங்கெல்லாம் சென்று வருவாரோ அங்கெல்லாம் அந்த செல்லப்பிராணிகளும் செல்வதுண்டு. ஒபாமாவுக்குப் பிறகு அதிபரான டொனால்ட் ட்ரம்புக்கு நாய்கள் என்றாலே ஆகாது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் நாய்கள் நுழைகின்றன.