கடந்த 1999ம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவருக்கு கடவுளை விமர்சித்து வஜியுல் ஹஸ்ஸன் என்பவர் கடிதம் எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த இந்த நபர் மீதான வழக்கு விசாரணை 2 ஆண்டுகள் நடந்த நிலையில், 2001ம் ஆண்டு கையெழுத்து நிபுணர் ஒருவர் ஹாசனின் கையெழுத்தும், கடிதத்தில் உள்ள கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதாக அளித்த அறிக்கையை அடுத்து, லாகூர் நீதிமன்றம் ஹாசனுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் மேல்முறையீடு செய்தாலும், லாகூர் உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
இதனையடுத்து அவர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பாகிஸ்தானின் சட்டப்படி கடவுளையோ அல்லது புனிதமானவற்றையோ விமர்சித்தால் அது குற்றமாக கருதப்பட்டு, அந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படும். ஆனால் கடந்த 18 ஆண்டுகளில் பாகிஸ்தான் காவல்துறையிடம் இருந்த ஆதாரங்கள் தொலைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சரியான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றம், "இந்த வழக்கிற்கு நேரடி சாட்சியங்களோ, இவர்தான் அந்த கடிதத்தை எழுதினார் என்பதற்கான சரியான ஆதாரமோ அரசுத்தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே யூகங்களின் அடிப்படையில் மரண தண்டனை வழங்கமுடியாது" என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து 18 ஆண்டுகாலத்திற்கு பிறகு நேற்று அந்த நபர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.