உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து, பின்னர் கரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களாக கரோனா மீண்டும் உச்சகட்ட தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.