தமிழகத்தில் தொடர்ந்து கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. நேற்று 21,228 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6,228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 6,000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 12,49,292 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 19,112 ஆக உள்ளது.
தொடர்ந்து கரோனா பரவி வரும் நிலையில் அரசின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்றவையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனையில் தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள ஸ்டாலின் ஈடுபட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு சில அறிவுறுத்தல்களை ஸ்டாலின் வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், '' உயிர் பயத்தோடு இருக்கும் மக்களின் உயிரைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக உள்ளது. நோய்ப் பரவலை தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களை நலப்படுத்துவது ஆகிய நோக்கங்களில் அரசு செயல்படுகிறது. தனியார் மருத்துவமனைகளும் 50 சதவிகிதப் படுக்கைகளை விட அதிக படுக்கைகளை ஒதுக்க வேண்டும். மருத்துவ அவசர நிலை எனச் சொல்லக்கூடிய அளவுக்குத் தீவிரம் இருப்பதால் 'கட்டளை மையம்' ஒன்றை (War Room) உடனே தொடங்க தலைமைச் செயலாரிடம் உத்தரவிட்டுள்ளேன். ஆக்சிஜன் இருப்பு, படுக்கைகள் இருப்பு, தடுப்பூசி குறித்து தெரிந்துகொள்ள கட்டளை மையம் உதவும்'' எனத் தெரிவித்துள்ளார்.