ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, துப்பாக்கியால் சுடப்பட்டதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை உலகையே உலுக்கியிருக்கிறது.
இரண்டு துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் ஜப்பான் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிப் பயன்பாட்டிற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட அமைதியை விரும்பும் நாடான ஜப்பான், இப்போது இப்படி ஒரு அரசியல் படுகொலையை எதிர்பார்த்திருக்கவில்லை. நரா என்ற இடத்தில் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென இரண்டு முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நெஞ்சில் காயத்துடன் கீழே விழுந்த ஷின்சோ அபே, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அபேவைத் துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமாகாமி என்ற 41 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அபேவைக் காப்பாற்ற ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் போராடினர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஷின்சோ அபே காலமானார். ஜப்பானின் மிக செல்வாக்குமிக்க தலைவரான ஷின்சோ அபேவின் படுகொலைக்கு அமெரிக்கா, இந்திய உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு ஜப்பானில் துப்பாக்கிப் பயன்பாட்டிற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், ஷின்சோ அபேவைப் படுகொலை செய்த நபர், அவரின் கொள்கைகள் தனக்கு திருப்தி அளிக்காததால் தானே தயாரித்த துப்பாக்கியைக் கொண்டு, அவரைச் சுட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020- ஆம் ஆண்டு நான்குமுறை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபேவின் படுகொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை.
ஷின்சோ அபேவின் மறைவால் ஜப்பான் முழுவதும் கண்ணீரில் மிதக்கிறது. ஜப்பான் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஷின்சோ அபேவின் திருவுருவப் படத்திற்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து வைத்து கண்ணீர் மல்க தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.