இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இஸ்ரேலுக்கு எதிராக, “எனது கவனம் முழுவதும் வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் மீது இருக்கிறது. இஸ்ரேலில் நடந்தது ஒரு பயங்கரவாத செயல்தான்; அதற்காக காசாவில் பொதுமக்கள் மீது குண்டு வீசி தாக்கி, அப்பாவி மக்களின் உயிர்களை பறித்ததை நியாயப்படுத்த முடியாது; இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலால் காசா வேகமாக வெகுஜன புதைகுழியாக மாறி வருகிறது” என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் பதிவு குறித்து பேசிய இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், “ஏஞ்சலினா ஜோலியின் கருத்தை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன். களத்தில் உள்ள உண்மை நிலவரங்களை பார்வையிடவும், பார்க்கவும் ஒருபோதும் ஏஞ்சலினா ஜோலி காசாவில் இருந்ததில்லை. அங்கு போர் நடப்பது உண்மைதான். ஆனால், மக்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு மனிதாபிமான நெருக்கடிகள் எதுவும் இல்லை. காசா சிறைச்சாலையாக மாறியதற்கு இஸ்ரேல் காரணமல்ல; தற்போது பயங்கரவாதத்தால் நிரம்பிய ஈரானின் தளமாக காசா உள்ளது” என்று கூறியுள்ளார்.