Skip to main content

"இப்போதுதான் சுவாசிக்க முடிகிறது" - நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் ஜார்ஜ் ப்ளாய்ட் சகோதரர் நெகிழ்ச்சி!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021
george flyod

 

 

கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக மினியாபோலிஸ் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு இழப்பீடாக 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவும் ஒப்புக்கொண்டது. இது இந்திய மதிப்பில் 196 கோடியாகும். இதற்கிடையே ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட டெரிக் சாவில் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. ஜார்ஜ் ப்ளாய்ட் மரணத்தை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

டெரிக் சாவின் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. 8 வராங்களில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. டெரிக் சாவினுக்கு 40 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தீர்ப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய  ஜார்ஜ் ப்ளாய்டின் சகோதரர், "எங்களால் மீண்டும் இப்போதுதான் சுவாசிக்க முடிகிறது. இருப்பினும் நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்