தனது மனைவியின் பணி குறித்துப் பொய்த் தகவல் அளித்த குற்றத்திற்காக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஃபிரான்கோய்ஸ் ஃபில்லன் மற்றும் அவரது மனைவிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஃபிரான்கோய்ஸ் ஃபில்லன். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தனது நாடாளுமன்ற உதவியாளராகத் தனது மனைவி பணி புரிந்ததாகப் போலியாகக் கணக்கு காட்டியதாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. 2017 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முன்னணியிலிருந்த ஃபில்லன் இந்தக் குற்றச்சாட்டுக் காரணமாக அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இதன் விசாரணை அண்மையில் முடிவடைந்தது. அதில், தனது மனைவி பணிபுரிந்தது தொடர்பாகப் போலியாகக் கணக்குக்காட்டி, அதன் மூலம் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் அவருக்குச் சம்பளமாகப் பெறப்பட்டது பாரிஸ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பளமாகப் பெற்ற எட்டு கோடி ரூபாயையும் அரசுக்குத் திரும்பச் செலுத்தவும், கூடுதலாக மூன்று கோடி ரூபாய் அபராதமாகச் செலுத்தவும் ஃபில்லனுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், ஃபில்லனுக்கும் அவரது மனைவிக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.