மனித குலத்தின் தேடல் பூமியிலிருந்து விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட மனிதகுலத்தின் முக்கியத் தேடலுக்கான விடைகளை விண்கலம் ஒன்று, ஒரு வருடமாகச் சுமந்து, பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்றால் சற்று திகைத்துத்தான் ஆகவேண்டும்.
பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மிகச்சிறிய கோள் ஒன்றுக்கு அனுப்பப்பட்ட விண்கலம், அடுத்த வாரம் பூமியை வந்துசேர இருக்கிறது. ஜப்பானிய விஞ்ஞானிகளால், தயாரிக்கப்பட்ட ஹயாபுசா-2 என்ற விண்கலம் அடுத்த மாதம் 6-ஆம் தேதி, தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் தரையிறங்க உள்ளது. மிகச் சரியாக, 2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 3 -ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹயாபுசா-2 விண்கலம், நான்கு ஆண்டுகள் பயணித்து, கடந்த 2018 -ஆம் ஆண்டு, 'ரியக்கு' என்ற சிறிய கோளில் தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்ட ஹயாபுசா-2 தேவையான தனது ஆராய்ச்சி பணிகளை முடித்துக் கொண்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பூமிக்குப் புறப்பட்டுவிட்டது.
தற்போது இந்த விண்கலமானது பூமியை மிகவும் நெருங்கிவிட்டது. ஹயாபுசா-2 சுமந்துவரும் மண் மாதிரிகளை ஆராய்வதன் மூலம், சூரிய மண்டலத்தினுடைய தோற்றம், உயிரினங்களின் தோற்றம் குறித்த விடைதெறியாத பல்வேறு ரகசியக் கேள்விகளுக்குப் பதில் தெரியவரும் என மகிழ்ச்சியில் உள்ளனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். இருப்பினும் சற்று சவாலும் தலைநீட்டத்தான் செய்கிறது. சேகரிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டியை, விண்கலத்தில் இருந்து பத்திரமாகத் தரை இறங்குவது தான் அதன் பயணத்தில் மிகப்பெரிய சவாலான ஒன்றாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியை வந்தடைந்தவுடன் ஹயாபுசா-2 எந்த இடத்தில் தரையிறங்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்ள ரேடார் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் பொருத்தப்பட்டு, தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற கோள்களை விட, சிறிய கோள்கள் சூரிய மண்டலத்தில் மிகவும் பழமையானதாகும். எனவே, அதிலிருந்து சேகரிக்கப்படும் மண் மாதிரிகள், மனிதனின் அறிவியல் ஆராய்ச்சியில் பல கேள்விகளுக்கான பதில்களை பொதிந்துள்ளதாகவே இருக்கும் என்கிறது விஞ்ஞான உலகம்.
பூமியிலிருந்து அந்தச் சிறிய கோளுக்குச் சென்று, ஆராய நான்காண்டு, பூமிக்குத் திரும்ப ஓராண்டு என மொத்தம் ஐந்தாண்டுகளை விண்வெளியிலேயே கழித்த 'ஹயாபுசா-2' மனித தேடலின் கேள்விகளுக்கான விடைகளைப் பூர்த்தி செய்யுமா என்பதை 8 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.