சீனாவின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தனித்தனி தீவுகளை உள்ளடக்கி 1949 ஆம் ஆண்டு தன்னை ஒரு தனி நாடாகத் தைவான் அறிவித்துக்கொண்டது. ஆனால், தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. பிரிந்தாலும் அது தன்னுடைய நாடு என்று சொந்தம் கொண்டாடும் சீனா, அதனை தன் நாட்டுடன் இணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், தைவானில் தேர்தல் நடத்தப்பட்டு அதிபரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அங்கு வாழும் மக்கள் கூட தைவான் ஒரு தனி சுதந்திர நாடு என்றுதான் கருதுகின்றனர்.
தைவானில் நடக்கும் அதிபர் தேர்தல்களில் சீனாவின் தலையீடுகள் அதிகம் இருப்பதாகச் சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், தைவானில் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் சீனாவுக்கு ஆதரவு நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், தைவான் நாட்டை சீனாவின் போர் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைக்காது, அச்சுறுத்தவும் செய்யாது. அதேசமயம் சீனாவிற்கு எதிராகச் சிறிய முன்னெடுப்புகள் எடுத்தாலும், அடுத்த நிமிடமே தைவானின் எல்லைப் பகுதி பதற்ற நிலைக்குச் சென்றுவிடும்.
இந்த சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாய் இங்-வென், மக்களிடையேயே ஆற்றிய முதல் உரையிலேயே தைவான் ஒரு சுதந்திர நாடு என்பதை உறுதியளித்து, அதனைக் கட்டிக்காக்க பாடுபடுவேன் என்றார். இதனால் கடும் கோபமடைந்த சீனா, தனது போர்க்கப்பலையும், விமானத்தையும் தைவானுக்கு அனுப்பிப் போர் பதற்றத்தைத் தூண்டி வருகிறது.
அதேசமயத்தில் தைவானுடன் எந்த நாடும் தூதரக உறவை மேற்கொள்ளக் கூடாது என்று உலக நாடுகளை சீனா எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவின் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா, தைவானுக்கு சுமார் ரூ.4,850 கோடி ராணுவ உதவிகளை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் சட்டத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே தைவானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அமெரிக்கா ராணுவ உதவிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது என்றும், இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.