இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், இந்தியாவுக்கு மற்றுமொரு எச்சரிக்கையை விடுத்துள்ளது அமெரிக்கா.
400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இதனை கைவிடவும் கோரியது. இல்லையென்றால் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியது.
ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை இந்தியா கைவிடவில்லை என்றால், இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்தடுத்து அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பல்வேறு விஷயங்களுக்கு அழுத்தங்கள் வருவதால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஆரம்பித்துள்ளது.