சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் குடியிருப்புகளில் பதுங்கியிருக்கும் கிளர்ச்சியாளர்களைத் தாக்க, சிரிய அரசு வான்வெளித் தாக்குதல்களைப் பயன்படுத்துகிறது. இதில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.
சிரியா மக்கள் தங்கள் வாழ்வைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில், சர்வதேச குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் இந்தப் போரினால் அந்நாட்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை விளக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது ஆண்டை எட்ட இருக்கும் மிகக்கொடுமையான சிரிய போர், அங்குள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு அந்நாட்டு குழந்தைகளுக்கு மிகக்கொடூரமான ஆண்டு; அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது குழந்தைகளின் இறப்பு விகிதம் 50% அதிகரித்துள்ளது. அதாவது அந்த ஆண்டில் 910 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 2015ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, கிளர்ச்சிக் குழுக்களில் இணைந்துகொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்திருக்கிறது.
2018ஆம் ஆண்டைப் பொருத்தவரை, அதன் தொடக்கத்தில் இருந்தே சிரிய மக்கள் நரக வேதனையைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் போரின் தாக்கங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல், நாளொன்றுக்கு சராசரியாக 6,550 பேர் அகதிகளாக வெளியேறுகின்றனர். ‘குழந்தைகளுக்குள் மற்றும் குழந்தைகளின் மீது ஏற்பட்டிருக்கும் இந்த வடுக்களை ஒருபோதும் அழிக்கவே முடியாது என யூனிசெஃப் இயக்குனர் கிரீட் காப்பலேர் தெரிவித்திருக்கிறார்.