டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.
இதனையடுத்து, தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாகத் தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகின்றார்.
அதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இத்தகைய சூழலில் ஜாஃபர் சாதிக்கின் நண்பர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சதா என்பவரை மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசார் நேற்று (13.03.2024) கைது செய்தனர். மேலும் சதாவிற்கு ஒரு நாள் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதா என்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சென்னை பெருங்குடி அருகே ஜாபர் சாதிக் தங்கியிருந்த வாடகை வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஒரு பை மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பெட்டி கிடைத்துள்ளன. மேலும் சாதிக் இல்லத்திற்கு வந்து சென்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு அழைக்கும் போது வாடகை வீட்டின் உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.