
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் முதுநகர் அருகேயுள்ள ராசாப்பேட்டையைச் சேர்ந்த வாழ்முனி என்பவரது மகன் தீபன் (20) மீனவரான இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 25.5.2020 அன்று தீபன் அந்த சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றுள்ளார். மேலும் அங்குள்ள ஒரு முந்திரி தோப்பில் வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் தீபன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கடலூர் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், 'தீபன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து ரூபாய் 5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.