
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க திருவண்ணாமலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்து திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் நேற்று அதிகாலை கல்லால் உடைக்க முயன்றார். ஆனால், கல்லால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஏடிஎம் மற்றும் சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன்மூலம், ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் அசோக் என்பதும், அவர் ஒரு உணவு வினியோக நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் மதுபோதையில் ஏ.டி.எம்.-ஐ உடைக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அசோக்கிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.