Skip to main content

'உங்கள் அன்புதான் எனது விடாமுயற்சிக்கு உந்து சக்தி'-அஜித் உருக்கம்

Published on 14/01/2025 | Edited on 14/01/2025
nn

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இத்தகைய சூழலில் தான், 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. அதன்படி முதலாவதாகத் துபாயில் நேற்று முன்தினம் (11.01.2025) முதல் நடைபெற்று வரும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார்.

அந்த வகையில் துபாயில் நேற்று (12.01.2025) நடைபெற்ற 24 ஹெச் ரேஸில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 992 போர்ஷே பிரிவில் 3ஆவது இடம் பிடித்தது. இதனால், அஜித்குமார் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது வெற்றியைக் கொண்டாடி வருகிறார். மேலும், அங்கு இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியவாறு தனது கொண்டாட்டத்தைப் பதிவு செய்தார். அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு, திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாழ்த்தியவர்கள் மற்றும் பாராட்டு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெளியான அறிக்கையில் 'துபாய் கார் பந்தய ரேசின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் எனக்கு கொடுத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், என் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்சில் புதிய சாதனைகளை படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்