
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஏமப்பேர் ஊரைச் சேர்ந்தவர் பூங்கா மகன் பிரபு. இவர், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி அதே கிராமத்தில் கோகுல்தாஸ் என்பவரது நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்துகிடந்தார். அது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்சார வேலி அமைத்தது யார்? எதற்காக அமைக்கப்பட்டது என விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காட்டுப்பன்றிகள் தனது விவசாய விளை நிலத்தில் நாசம் செய்வதைத் தடுப்பதற்காக கோகுல்தாஸ் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்து இருந்தார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளவழகன், குற்றம்சாட்டப்பட்ட கோகுல்தாஸ் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்தற்காக அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், 6 ஆயிரத்து 870 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் கோகுல் தாஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட சேட்டு, வேலு ஆகியோர் போதிய சாட்சிகள் இல்லாததால் வழக்கிலிருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.