‘மூட்டுவலியா? கவலையை விடுங்க.. இதோ தீர்வு!’ என்ற விளம்பரத்தை நம்மில் பார்க்காதவர்கள் / படிக்காதவர்கள் இருக்கமுடியாது. வலைத்தளங்களிலும், ‘மூட்டுவலி நொடியில் குணமாகிவிடும். இருக்கவே இருக்கிறது.. எருக்கம் இலை மருத்துவம்..’ என்பது போன்ற மருத்துவக் குறிப்புகளைப் பகிரச் சொல்லும் நட்புவட்டம் வேறு நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷேக் அப்துல்லாவும் “இதுவும் மூட்டுவலிக்கான தீர்வுதான்.. காலுக்கு ஏற்ப பிரத்யேகமாக நான் தயாரித்து அளிக்கும் ஷூவை அணிந்தால் போதும்.. வலி இருக்குமிடம் தெரியாமல் பறந்துவிடும்.” என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.
யார் இந்த ஷேக் அப்துல்லா?
ஸ்ரீவில்லிபுத்தூர் – கிருஷ்ணன்கோவில் – கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் & கம்யூனிகேஷன் துறையில் மூட்டுத் தேய்மானம் மற்றும் ஸ்டெம்செல் இமேஜிங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
‘முட்டுவலியை ஷூ எப்படி போக்கும்?’ என்ற நமது கேள்விக்கு விரிவாகவே விளக்கமளித்தார் ஷேக் அப்துல்லா -
“2018-ம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 83.94 சதவீத மக்கள் மூட்டு தேய்மானத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. மூட்டுவலி பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம். பெரும்பாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த அவஸ்தை.
எலும்புகளுக்கிடையே பசைபோல் உள்ள Synovial Fluid குறையும்போது குறுத்தெலும்பில் தேய்மானம் உண்டாகிறது. இதனால்தான், மூட்டுவலி, மூட்டைச் சுற்றி வீக்கம், கால்களை நீட்டவும் மடக்கவும் முடியாதது, படியேற முடியாதது, உட்கார்ந்து எழ முடியாதது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.
குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஜவ்வு தேய்ந்து இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசும்போது வலி ஏற்படுகிறது. தேய்மானத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுப்பழக்கம், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உடல் எடையைச் சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவையே மூட்டுவலிக்கான காரணங்கள் என்றாலும், நடைப்பயிற்சி முறையும் மிக முக்கிய காரணமாக மருத்துவத்துறையால் பார்க்கப்படுகிறது.
மூட்டு தேய்மானத்தைச் சரிசெய்வதற்கு உலகளவில் பல மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சவூதி அரேபியா போன்ற நாடுகள் மூட்டுவலியிலிருந்து விடுபடுவதற்கான நிரந்தரத் தீர்வுக்காக இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மூட்டு தேய்மானத்தை நான் வேறு கோணத்தில் அணுகியபோது, முதலில் சாதாரண வலியால் அவதிப்படுபவர்கள், நாளடைவில் காலின் அமைப்பு மாறுதலால் (Valgus and Varus) அந்த வலி அதிகமாகி சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதனைச் சரிசெய்யும் முயற்சியில் ஆய்வினை மேற்கொண்டபோது HUMAN BODY KINEMATICS தந்துவங்களைப் படிக்க நேரிட்டது. மூன்று வருடங்களாக ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது, தேய்மானத்தால் மாறக்கூடிய அமைப்பைச் சரிசெய்யும் வழிமுறையைக் கண்டுபிடித்தேன்.
KNEE BIO-MECHANICS என்ற அறிவியல் தத்துவத்தின்படி இயங்கக்கூடிய, எனது தயாரிப்பான ஷூவை அணிந்து நடக்கும்போது, இரண்டு எலும்புகளுக்கும் (FEMUR-TIBIA) உள்ள இடைவெளி அதிகரித்து தேய்மானத்தால் ஏற்படும் உராய்வு தடுத்து நிறுத்தப்படுவதால், உடனடியாக வலி குறையும். இந்தக் கண்டுபிடிப்பு, சவூதி அரசாங்கத்திலுள்ள தபூக் பல்கலைக்கழக மருத்துவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.” என்றார் பெருமிதத்துடன்.
மூட்டுவலி என்ற இம்சையிலிருந்து மக்களை விடுவிக்கக்கூடிய எந்த ஒரு கண்டுபிடிப்பும் வரவேற்கத்தக்கதே!