
புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார்.
புகார் கொடுத்ததுமே கைது செய்துவிட முடியுமா என புகார் கொடுத்தவர்கள் ஆதாரம் கொடுக்க வேண்டும் அதன் மீது விசாரணை நடத்தி அதன் பின்னே நடவடிக்கை எடுக்க முடியும் என அண்ணாமலை சொல்கிறார்?
“பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து, அவரை கைது செய்யக் கோரி கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் இன்று வரை பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு செவி சாய்க்காமல் பாராளுமன்ற திறப்பு விழாவில் செங்கோலை வைத்து ஆதாயம் தேடியது. அதேசமயம் அவர்களோடு போராடும் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தான் நம்முடைய முதல்வர் செங்கோல் வைத்த அன்றே வளைந்துவிட்டது என்று கூறி இருக்கிறார்.
புகார் அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறும் அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் படித்துத் தான் வேலை பார்த்தாரா என்று பல கேள்விகள் வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு பரப்பியதாக அவரை 2 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுத்தவர்கள் இவர்கள். போராடும் வீரர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வீரர்கள் கொடுத்த புகாரை வெள்ளை காகிதம் என வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது” என்றார்.