
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த 45 நபர்கள் கரூர் மாவட்ட குற்றவியல் பிரிவு காவல்துறையிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்தப் புகார் மனுவில், கருப்பண்ணன் என்பவர் மூலம், ரங்கநாதன் என்பவர் அறிமுகமானார். ரங்கநாதன், தென்னக இரயில்வேயின் தலைமை கணக்காளராக பணியாற்றி ஒய்வு பெற்றதாக கூறினார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தி மதுரை கோட்டத்தில் செக்சன் ஆபிசராக இரயில்வே துறையில் பணியாற்றி வருவதாக கூறினார். அவரது அடையாள அட்டையை காட்டி, இரயில்வே துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்றும் அதன் மூலம் இரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவாதக் கூறினார். அதனால், நாங்கள் 45 நபர்களும் கருப்பண்ணனிடம் மொத்தம் இரண்டு கோடியே ஏழு லட்சம் ரூபாயை கொடுத்தோம். ஆனால், வேலையை வாங்கித் தரவில்லை. எங்கள் பணத்தையும் ஏமாற்றினார் என குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ரெங்கநாதன் மீது ஏற்கனவே தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் மோசடி புகார் கொடுத்து அதில் ரெங்கநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து கொரோனா காலத்தில் இறந்துவிட்டார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் கூட்டு சதியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, ரமேஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற ஆஜார்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.