திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரும், அயனாவரத்தைச் சேர்ந்த காவலர் வீரமணி என்பவரும் கடந்த 2017ஆம் ஆண்டு காவலர் பயிற்சியின்போது காதலித்தனர். அதனால் சரஸ்வதி, வீரமணியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து வீரமணி மறுப்பு தெரிவிக்கவே சரஸ்வதி பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு சரஸ்வதி மீடியாக்களை சந்தித்து முறையிட்டார். அதனைத் தொடர்ந்து, வேறு வழியின்றி 2021ஆம் ஆண்டு சரஸ்வதி - வீரமணி திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், வீரமணி வீட்டிலிருந்து சரஸ்வதி வெளியேற்றப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சரஸ்வதி, ஓட்டேரி துணை ஆணையர் அலுவலகத்திலும், சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்திலும் அது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார். இதனால், இன்று (04.10.2021) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு கீழ் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீரமணி தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.