பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பாகனாக பணியாற்றிவந்த ராஜ்குமார், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி சேத்துமடை செக்போஸ்ட் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி மஞ்சு, ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அங்கிருந்த காவலர்கள் இவரின் புகார் மீது விசாரணை நடத்தாமல் இழுத்தடித்துள்ளனர். இதனால், கணவனை இழந்து வேதனையில் இருந்துவந்த மஞ்சு நேற்று (21ம் தேதி) சென்னைக்கு வந்து, முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர், “பொள்ளாச்சி தாலுகா டாப்ஸ்லிப் கோழி கமுத்தி செட்டில்மண்ட் யானைகள் முகாமில் 15 வருடங்களாக என் கணவர் S. ராஜ்குமார் யானை பாகனாக பணியாற்றிவந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று, அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு யானை பாகனான சந்திரன் என்பவர், ‘வனத்துறை அதிகாரி அழைத்து வர சொன்னார்’ என காலை 10 மணி அளவில், எனது கணவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார்.
சந்திரனுடன் சென்ற எனது கணவர் ராஜ்குமார், மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதம் 5ம் தேதி மாயத்துரை என்ற வனத்துறை அதிகாரி, எனது மாமியார் தங்கத்தை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, ‘உங்களது மகன் ராஜ்குமார் சேத்துமடை செக்போஸ்டில் இருக்கிறார். வாருங்கள்’ என்று தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் பேரில் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். நாங்கள் அங்கு சென்று பார்த்த போது, சேத்துமடை செக் போஸ்ட்டிற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஆர்.டி.ஓ. மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ், திரளான பொது மக்களும் அங்கு திரண்டு இருந்தனர்.
இவர்களை எல்லாம் பார்த்த பொழுது எங்களுக்கு மிகவும் பயம் வந்து விட்டது. அதன் பிறகு என்னுடைய கணவர் ராஜ்குமார் மர்மமான முறையில், அழுகிய நிலையில் அங்கு பிணமாக கிடந்தார். பிறகு உடலை அங்கிருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எங்களுக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்த போது, ‘டாப் ஸ்லிப்பில் இருந்து, வேனில் சந்திரன், விஜயன், அருண், வெங்கடேசன் ஆகிய நால்வரும் தான் உன் கணவர் ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர்’ என்று கூறினர். ஆனால் காவல்துறை, மேலே குறிப்பிட்டுள்ள நால்வரை விசாரணை செய்ததாக தெரியவில்லை. எனவே நாங்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் என் கணவர் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் தெரிவித்தோம். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நியாயமான முறையில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, நீதியை நிலை நிறுத்த வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.