![Woman arrested by police who made six marriage](http://image.nakkheeran.in/cdn/farfuture/qz1_DbK05IbiqSG4UqGSGkyL7LYbtBnXrO2WlADLzCU/1684735653/sites/default/files/inline-images/th_4234.jpg)
மகாலட்சுமியின் என்ற பெண்ணின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டப் புரட்ட அதிர்ச்சியே அணிவகுக்கிறது.
கோத்தகிரி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவிதான் இந்த மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு 17 வயது மற்றும் பதினாறு வயதில் இரண்டு மகன்களும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாலகிருஷ்ணன் இறந்து போனார். அதன்பிறகு, மூன்று பிள்ளைகளின் தாயான மகாலட்சுமி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற கட்டிட மேஸ்திரியுடன் நெருக்கமாகி, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஊட்டியில் குடும்பம் நடத்திவந்தனர்.
நாளடைவில் மகாலட்சுமிக்கும் பாலாஜிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டுப் பிரிந்த மகாலட்சுமி, ஊட்டியைச் சேர்ந்த பெயிண்டர் மணி என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். அவருடன் மூன்று மாதம் மட்டுமே குடும்பம் நடத்திவிட்டு, பிறகு அவரை விட்டுப் பிரிந்து தலைமறைவான மகாலட்சுமி, சமூக வலைதளம் மூலம் சபல ஆண்களுக்கு வலை வீசினார்.
அவர் வலையில், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர் சிக்க, அவரிடம், தான் ஒரு அனாதை என்று கூறி நம்பவைத்த மகாலட்சுமி, அவரையும் ஏமாற்றி, நாலாவதாக அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடன் குடும்பம் நடத்திவந்த நிலையில், அருள் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து, பணம், நகைகளை அள்ளிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
![Woman arrested by police who made six marriage](http://image.nakkheeran.in/cdn/farfuture/1jOqfI7Dkz8F4tu0LzEcvEf8K9Qk5mPlFxbGnkyphLs/1684735678/sites/default/files/inline-images/th-1_4002.jpg)
அடுத்ததாக, அவர் பேஸ்புக்கில் வீசிய தூண்டிலில், மணிகண்டன் என்ற மற்றொரு இளைஞர் கடந்த நவம்பர் மாதம் சிக்கினார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்த மணிகண்டனை இன்பாக்சில் சந்தித்துப் பேசிய மகாலட்சுமி, அவரை ஐந்தாவதாகத் திருமணம் செய்துகொண்டார். மணலூர்ப்பேட்டையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் மகாலட்சுமிக்குத் தாலி கட்டியிருக்கிறார் மணிகண்டன். கொஞ்சநாள் ஆனதும், மகாலட்சுமியின் வெரைட்டி வேட்கை மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் மணிகண்டன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயுடன் வழக்கம் போல் கிளம்பிவிட்டார் மகாலட்சுமி.
மகாலட்சுமியுடன் பணமும் மாயமானதால் திகைத்துப்போன மணிகண்டன், போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மணிகண்டன் ஒரு பக்கமும், காவல்துறை ஒரு பக்கமும் மகாலட்சுமியைத் தேடினர். மகாலட்சுமியோ, சின்னராஜ் என்பவரை ஆறாவதாகத் திருமணம் செய்துகொண்டு, முன்கதையை எல்லாம் மெமரியில் இருந்து டெலிட் செய்துவிட்டு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வந்தார். அவரை ஸ்மெல் செய்து போலீசார் கண்டுபிடித்தனர். அவரை மடக்கி விசாரித்த போதுதான், மகாலட்சுமியின் திருமண புராணம் முழுவதும், விசாரணை டீமுக்கு தெரியவந்தது.
மகாலட்சுமி போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தான் ஆண்களை வசப்படுத்தித் திருமணம் செய்துகொண்டதையும், அவர்களுடனான வாழ்க்கை சலித்ததாலும், ஆடம்பர செலவுக்குப் பணம் தேவைப்பட்டதாலும், அவர்களிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்று, அடுத்தடுத்த வாழ்க்கையைத் தேடியதாகவும் அசால்டாகத் தெரிவித்து, விசாரித்த போலீஸ் டீமையே அதிரவைத்திருக்கிறார்.
மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்ட ஆண்கள், அவரைப் பற்றி முழுதாக விசாரிக்காமலே எப்படித் திருமணம் செய்துகொண்டார்கள்? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறதாம்.