நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விருதுநகர் - விஜய பிரபாகரன், மத்திய சென்னை - பார்த்தசாரதி, திருவள்ளூர் - நல்லதம்பி, கடலூர் - சிவக்கொழுந்து, தஞ்சை - சிவனேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை.