அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ''நான்கு ஆண்கள் அமர்ந்து கொண்டு பெண்கள் முன்னாடி வந்து விடக்கூடாது, எதிராக பேசக்கூடாது என்று பார்க்கிறார்கள். இன்று முதல்வர் பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றால் பாருங்கள், நாளைக்கு என் வீட்டில் 10 பேர் கல் தூக்கி வீசினாலும் எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. திமுகவினர் என் வீட்டில் கல் வீசியதை நான் ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கிறேன். எனக்கு அது பெரிய விஷயமே கிடையாது. அதை எப்படி சந்திக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்'' என ஆவேசமாக பேசியிருந்தார்.
அதைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என குஷ்பு தெரிவித்தார். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என குஷ்பு கூறியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து தமிழக டிஜிபிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'இந்த விவகாரத்தில் என்னென்ன பிரிவுகளில் எல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. புகாரின் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை என்ன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் விரிவாக அறிக்கையாக தயாரித்து, மூன்று நாட்களுக்குள் ஆணையத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.