Skip to main content

எம்.ஜி.ஆர். செய்ததைத்தான் நான் செய்கிறேன், இதை யாரும் கேட்கக்கூடாது... -கமல் கோபம்

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி, அதற்கு பெயர் அறிவித்து, அதிகாரப்பூர்வ கொடியை அறிமுகம் செய்ததில் இருந்து, தெருமுனைக் கூட்டம், கிராமப்பஞ்சாயத்து சபைகள் என்று பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர் கட்சி, மத்திய ஆளும் கட்சி என அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார். அதேசமயம் அவர் படங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டிவருகிறார். அவர் ஒரு பகுதி நேர அரசியல்வாதி என்று பாஜக-வும் அதிமுக-வும் விமர்சனம் செய்து வருகின்றது. அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் சேலத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளும் கட்சியினர் ரிசார்ட்டில் ரெஸ்ட் எடுப்பதாகவும், அந்த நேரத்தில்தான் மக்களுடன் சேர்ந்து கிராமப்பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்று ஒரு அரசியல்வாதியாக தம் பணியை செய்துள்ளதாகவும் பேசியுள்ளார்.

 

kk

 

இன்னமும் ஆளும் கட்சியின் நிலைமையையும், ஊழலையும் திரும்பித் திரும்பி பேசி புலம்பிக்கொண்டிருக்க நேரம் இதுவல்ல. நாம் நாளையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம். பலமுறை வெவ்வேறு ஆட்களை வெற்றிபெற வைத்து நீங்கள் தோற்றுக்கொண்டு இருக்குறீர்கள். ஆனால், இம்முறை நீங்கள் வெற்றிபெற வேண்டும். உங்களை வெற்றிபெற வைத்த தலைவர்கள் எல்லாம் இன்று இல்லை. நான் இங்கு பார்ப்பது எல்லாம் ரசிகர்களின் கூட்டத்தையோ, தொண்டர்களின் கூட்டத்தையோ இல்லை நாளையத் தலைவர்களின் கூட்டத்தை. தமிழகத்தின் தலைமையை நீங்கள் ஏற்கவேண்டும் அதற்கு சேவை செய்ய சேவகர்களை நீங்கள்தான் நியமிக்க வேண்டும். அதில் ஒருவனாய் பெருமையாக நான் முன் நிற்பேன். எனது இருபது வயது முதல் எனக்கு பலமுறை சொல்லப்பட்ட விஷயம் 'இப்படி வாய்க்காது உனக்கு வாய்த்து இருக்கிறது அதை பயன்படுத்திக்கொள்' என்பதே. அவற்றை எல்லாம் மதித்து எனக்கு கிடைத்த வாய்ப்புகளாக நினைத்து பயன்படுத்தி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். ஆனால், உங்கள் முன் நிற்கும் இந்த இடத்தை நான் வாய்ப்பாக கருதவில்லை, இது என் கடமையாக நினைக்கிறன். உங்களுக்கு எல்லாம் பதில் சொல்வதுமட்டும் என் கடமை அல்ல வேலை செய்வதும் என் கடமையே அதை நிச்சயம் செய்வேன். உங்கள் பணியில் வாழ்வதுதான் இனி வாழ்க்கை. அப்போ சினிமாவில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால் நடிப்பேன் என்றுதான் சொல்லுவேன். இப்படி சொன்னால் நீங்கள் பகுதிநேர அரசியல்வாதியா முழுநேர அரசியல்வாதி இல்லையா என்பார்கள்.

 

 

 

அப்படி கேட்பவர்களை எல்லாம் பார்த்து நான் திருப்பி கேட்கிறேன். நாங்கள் எல்லாம் கிராமப்பஞ்சாயத்தில் மணி கணக்கில் அமர்ந்து பேசுகிறோம். ஆனால், அந்த இடத்திற்கு நியாயமாக போகவேண்டியவர்கள் எங்கோ ரிசார்ட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் யார் முழுநேர அரசியல்வாதிகள். எம்.ஜி.ஆர் அரசியலில் இருக்கும்போதே படங்களையும் நடித்துவந்தார். எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் என்று படங்களின் தலைப்பில் பார்த்ததில்லையா. அவரென்ன பகுதிநேர அரசியல்வாதியா. அவர் அவரின் வாழ்வாதாரத்துக்காக படங்களில் நடித்தார். அதனால்தான் அவரால் தைரியமாக கணக்கு கேட்கமுடிந்தது. தன்னை முழுநேர அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு, ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் உங்களுக்கு வேலை செயகிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் கஜானாவை காலி செய்ததைத்தவிர வேறு என்ன செய்தார்கள்.

 

 

 

ஆங்கிலத்தில் விஷன் என்று ஒரு வார்த்தை உள்ளது. விஷன் என்பது லட்சியம் என்று பொருள் அதனை வைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன், உங்களுக்கும் அது தென்படவேண்டும். அப்படி தென்பட்டால் நாளை நமதே. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதே என்று கதறி பிரயோஜனம் இல்லை. நாம் அழுத்தி கேள்விகளை கேட்கவேண்டும். அனைவருக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான் வியாபாரியின் சிந்தனை. என்னையும் விலைபேசி இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விலைபேசிவிட முடியாது. என்னை விலை பேசியவர்கள் எல்லாம் தோற்றுப்போனார்கள். நிறையபேர் வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், வாங்க முடியாது என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும். என்னை விலைபேசிய கதை பலருக்கு நினைவிருக்கலாம், பலர் அதை மறந்து இருக்கலாம். ஆனால், நான் விலை போகவில்லை. 'நீங்க இன்னும் சொத்து சேர்த்து இருக்கலாமே, அந்த விஷயத்தில் மட்டும்தான் நீங்கள் கோட்டைவிட்டுவிட்டிர்கள்' என்று சொல்லியவர்களை எல்லாம் எண்ணி எள்ளி நகையாடுவதைவிட வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களுக்கு தெரியாது என் சொத்து இங்கு (மக்கள்) இருக்கிறது என்று. என்னை அவர்களால் ஏழையாக ஆக்கவே முடியாது. உங்கள் அன்பு இருக்கும்வரை நான் நிரந்தர பணக்காரன். இனி நீங்களாக என்னை வழியனுப்பும்வரை நான் உங்களை நோக்கி வந்துகொண்டே இருப்பேன். நாளை நமதாக வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒன்றுகூடி ஒரு நோக்குடன் செயல்பட வேண்டும். அப்படி செய்தால் நாளை நமதே. 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.