நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிக்கவும் தண்ணீர் இல்லை. இனியும் காத்திருந்தால் எதற்கும் தண்ணீர் கிடைக்காது என்பதால் இளைஞர்களே களமிறங்கி நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீரை சேமிக்க தொடங்கிவிட்டனர். தஞ்சை- புதுக்கோட்டை மாவட்ட எல்லை கிராமங்களில் நிலத்தடி நீரை சேமிக்க இளைஞர்களின் முயற்சியால் நீர்நிலை சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை இளைஞர்கள் தங்களது சொந்த பணத்தில் செய்து வருகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கூட அகற்றிக் கொடுக்க அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 7 பெரிய ஏரிகள், குளங்களை சீரமைத்த இளைஞர்கள், ஏரிக்கு வரும் வரத்து பகுதிகளையும் சீரமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்புகளால் பணிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளில் பல நெருக்கடிகளை சந்தித்த நெடுவாசல் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடினார்கள். இந்த கூட்டத்தில் நம்ம ஊர் குளங்களை நாம் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். அதனால் உருவானது நெடுவாசல் நீர் மேலாண்மைக்குழு. இந்த குழுவோடு பல கிராமங்களில் நீர்நிலைகளை சீரமைத்து வரும் கடைமடைப் பகுதியை சேர்ந்த குழு ஒருங்கிணைந்த விவசாயிகளுடன் இணைந்தது. ஞாயிற்றுக் கிழமை காலை 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள முடுக்குவயல் நெடுவாக்குளம் ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்க பூமி பூஜை நடந்தது.
அப்போது ஒன்று திரண்ட இளைஞர்களும், விவசாயிகளும், நிலத்தடி நீரை சேமிக்க குளம் ஏரிகளை தூர்வாருவோம். தூர்வாரிய ஏரிகளில் மழைத் தண்ணீரை சேமித்து பயன்படுத்துவோம். நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கமாட்டோம் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானியின் கூற்றுப்படி மழைநீரை சேமித்து பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நெடுவாக்குளம் ஏரியில் தண்ணீரை சேமித்தால் உள்ளூரில் 250 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். பக்கத்து ஊருக்கும் தண்ணீர் கொடுக்கலாம். அதனால தான் முதலில் இந்த ஏரியை தூர்வார தொடங்கி உள்ளனர். அடுத்தடுத்து அனைத்து ஏரிகளையும் தூவாருவோம் என்று நீர் மேலாண்மைக்குழுவினர் கூறினர்.