Skip to main content

“சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 03/09/2024 | Edited on 03/09/2024
We must win more than 200 seats in the assembly elections says Minister sakkarapani

திண்டுக்கல் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தெற்கு  ஒன்றிய செயலாளரும் தலைவருமான வெள்ளிமலை தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டியம்பலம், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட விவசாய அமைப்பாளர் இல்.கண்ணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஏராளமானோருக்கு விடுபட்டுள்ளது. தகுதி உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு அரசு கல்லூரியில் உயர் கல்வி படிக்கச் சேரும் பொழுது புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மாத மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பெண்களின் கல்வி வளர்ச்சி 34 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த வருடம் முதல் தமிழ் புதல்வன் திட்டத்தை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களில் ரேஷன் கார்டு கேட்டு புதிதாக விண்ணப்பித்த 16 லட்சம் பேருக்கு கார்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 3 லட்சம் பேர் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்கு தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வு பணி தற்போது நடைபெற்று வருகிறது ஆய்வுப் பணிகள் முடிவடைந்த உடன் அவர்களுக்கும், மீதம் உள்ளவர்களுக்கும்  ரேஷன் கார்டு வழங்கப்படும். அதேபோல் தமிழகத்தில் 2,115 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கிலோ 28 ரூபாய் வீதம் உயர் தரமான அரிசி மாதந்தோறும் 75,000 மெட்ரிக்டன் வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகள் மூலமாகப் பருப்பு, ஆயில்  என அனைத்து பொருட்களும் தரமானதாகப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் இலக்கு வைத்திருக்கிறார். அந்த இலக்கை நோக்கி நாம் இப்போதே தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். அத்தோடு தமிழக முதல்வர் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் தெரு பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை மட்டன் பிரியாணியுடன் சிக்கன் விருந்து வைத்து அனுப்பி வைத்தார். 

சார்ந்த செய்திகள்