Skip to main content

“ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்” முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

"We are looking after and implementing every project" Chief Minister M.K. Stalin

 

தேனி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகே நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மாவட்ட ஆட்சியர் முரளிதரன்,  மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட அதிகாரிகளும், கட்சிப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனி மாவட்டத்திற்கு வந்தவர், வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினார். பின் இன்று காலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தேனியில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். விழா பந்தலுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டதும் மக்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் அவர் நடந்து சென்றார். அங்கு மக்கள் ஆர்வத்தோடு அவரிடம் கைகுலுக்க வந்தனர். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். 

 

பின்னர் தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

 

"We are looking after and implementing every project" Chief Minister M.K. Stalin

 

அதன்பின் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “நான் முதலமைச்சராக பொறுப்பேற்று வரும் மே 7-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. தேனிக்கு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்துள்ளேன். தேனி மாவட்டத்தை கலைஞர் உருவாக்கினார். தேனி ஆட்சியர் அலுவலகத்தை கலைஞர் தான் திறந்து வைத்தார். அதுபோல் தேனி உழவர் சந்தையை கலைஞர் தொடங்கி வைத்தார். 18-ம் கால்வாய் திட்டத்தை கலைஞர் தான் தொடங்கி வைத்தார். 


தேனி புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த நான் தான் அடிக்கல் நாட்டினேன் என்பதை பெருமிதத்தோடு நினைவு கூறுகிறேன். இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் 10 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இது தான் ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம். இது மக்களுக்கான அரசு. இதை தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அது தான் என்னுடைய மாடல். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்