
1978ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல, தமிழகத்தில் உள்ள 68 சமுதாய மக்களை பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தது. இதனை, சீர்மரபினர் நலச்சங்கம் கையில் எடுத்து, போராட்டங்கள் மூலம் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு, DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபின சமுதாய மக்கள் பெறலாம் எனத் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.
சமீபத்தில், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் தற்காலிகமானது என்றும், 6 மாதங்களுக்குப் பின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியபின், தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், வன்னியர் சமூகத்துக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும்போது, சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு. இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அ.தி.மு.க அரசு தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, அ.தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் ஓட்டுப் போடக்கூடாது எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக சீர்மரபினர் நலச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, “கடந்த 6 வருட காலமாக, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். அ.தி.மு.க அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை. 7% உள் இடஒதுக்கீடு எனக் கூறி, 68 சமுதாய மக்களையும் ஏமாற்றியிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, மத்திய அரசின் சலுகைகளைப் பெறும்போது, தமிழக அரசு மட்டும் எங்களை வஞ்சிக்கும் விதமாக நடந்துகொள்கிறது. அதனால்தான், எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியிருக்கிறோம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க, 68 சமுதாய மக்களும் தயாராகி வருகிறோம். வீடுவீடாகச் சென்று அ.தி.மு.க.விற்கு வாக்களிக்காதீர்கள் எனப் பிரசாரம் செய்துவருகிறோம். தென் மாவட்டம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்” என்று கூறினார்.