தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுக் குறைந்து மேற்கு - வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே சமயம் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏரிக்கு நீர் வரத்து 6,498 கன அடியாக உள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர் மட்டம் தற்போது 23.29 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் இன்று (13.12.2024) காலை 8 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் திருமுடிவாக்கம், குன்றத்தூர், பொழிச்சலூர்,அனகாபுத்தூர், திருநீர்மலை, காவனூர் சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.