கேரளாவில் திங்கள் கிழமை அதிகாலை காட்டுக்குள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் மாணிக்கவாசகத்தை அடையாளம் காட்ட திருச்சி சிறையில் இருக்கும் அவரது மனைவி கலா மற்றும் அவரது அக்கா சந்திராவை பரோலில் அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.
இந்தநிலையில்தான் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொருவர் கார்த்திக் என்று கூறப்பட்டது. அந்த கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - காரைக்குடி சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து – மீனா தம்பதிகளின் இளைய மகன் என்பது தெரிய வந்தது.
இது குறித்து கார்த்திக்கின் தாயார் மீனாவை அவரது வீட்டில் சந்தித்த போது..

நாங்கள் பெற்றோர்கள் வைத்த பெயர் கண்ணன். ஆனால் இப்ப கார்த்திக் என்கிறார்கள். 10 வருசத்துக்கு முன்னால திருப்பூர்க்கு வேலைக்கு போறதா போனான். அப்பறம் அவனை மாவோயிஸ்ட்னு புடிச்சாங்க அதுக்கு பிறகு ஒரிசா பக்கம் கொண்டு போனாங்க. அப்பறம் தமிழ்நாட்டுக்குள்ள அவனை அனுமதிக்கல அதனால் எங்கே இருக்கிறான். எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு தெரியல. எந்த தொடர்பும் இல்லை.
இப்ப திங்கள் கிழமை அதிகாலையில் கேரளாவுல காட்டுக்குள்ள நடந்த சண்டையில சுட்டுக் கொன்னுட்டதா சொன்னாங்க. உடனே செவ்வாய் கிழமை அங்கே போனோம். உடல் போஸ்ட் மார்டம் கொண்டு போயாச்சுனு சொல்லி காத்திருக்க சொன்னாங்க. ஆனா அதுக்கு பிறகு என்னை பார்க்க விடாம திருப்பி அனுப்பிட்டாங்க. கடைசியில என் மகன் முகத்தை கூட எனக்கு காட்டலய்யா என்று கதறினார்.
இந்த நிலையில் கண்ணன் என்கிற கார்த்திக்கின் அண்ணன் முருகேசன் நம்மிடம்..
நல்ல மார்ச்சிய சிந்தனையாளன், சமூக செயற்பாட்டாளன் என் தம்பி கண்ணன். 2007 ல் வேலைக்காக திருப்பூர் சென்ற இடத்தில் எதிர்பாராமல் அவன் தங்கி இருந்த அறையில் கூட இருந்தவர்களை நக்சல் என்று கைது செய்தனர். ஆனால் என் தம்பி கண்ணன் மேல ஒரு வழக்கு கூட இல்லை. அதனால் அவர் சொன்ன தகவல்படி துப்பாக்கி கைப்பற்றியதாக வழக்குபதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள். அதன் பிறகு ஒரிசா என்று பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று கடைசியில் 2010 ல் பிணையில் வந்தவனை எங்களுடன் தங்க அனுமதிக்காத போலீசார் திண்டுக்கல் மாட்டத்தில் காலை மாலை கையெழுத்து போட வைத்தனர். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்துவிட்டு வீட்டுக்கு வருவதைவிட நக்சலாகவே போறேனு போயிட்டான். அதன் பிறகு எங்களுடன் தொடர்பே இல்லை. சமூக செயற்பாட்டாளரான என் தம்பி கண்ணனை நக்சல் கார்த்திக்காக மாற்றியது இந்த போலீசும், அரசாங்கமும் தான்.

இப்ப திங்கள் கிழமை சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வந்தது. அங்கே போனால் சடலத்தை பார்க்க அனுமதிக்கவில்லை 2 நாட்கள் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாடி அனுமதிபெற்று சடலத்தை பார்க்க சென்றேன். ஆனால் அங்கே கிடந்த சடலத்தில் கண்கள் இல்லை, முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அதனால் அடையாளம் காண முடியவில்லை. அதனால தான் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள படம் கேட்டேன் தரல. அதனாலதான் சுட்டுக்கொல்லப்பட்டது என் தம்பி தானா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏதோ சதி நடப்பதை அறிகிறேன். அதனால் நீதிமன்றத்தை நாடி சடலத்தை பாதுகாக்கவும், மோதல் நடந்த போதும், சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கேட்டிருந்தோம். 4 ந் தேதி வரை சடலத்தை பாதுகாக்கவும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதற்கு 2 நாட்களும் அவகாசம் கொடுத்திருக்கிறது நீதிமன்றம். முழுமையாக எனக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே சடலத்தை வாங்குவோம் என்றார்.