விருதுநகர் மாவட்டத்தில், விதிமீறலாகச் செயல்படும் பட்டாசு ஆலைகளால், விபத்துக்களும் உயிரிழப்புக்களும் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
சாத்தூர் வட்டத்திலுள்ள சிப்பிப்பாறை என்ற கிராமத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. டி.ஆர்.ஓ. லைசன்ஸ் பெற்றும் இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில், விதிகளுக்கு முரணாக ஃபேன்சி ரகப் பட்டாசுகள் தயாரித்தபோது, இன்று வெடி விபத்து ஏற்பட்டது. அதனால், மளமளவென்று ஒவ்வொரு அறையாக தீ பரவ, 13 அறைகள் தரைமட்டமானது.
இவ்விபத்தில், பட்டாசு ஆலை ஊழியர்களான ராணி, ஜெயபாரதி, வேலுத்தாய், பத்ரகாளி, தங்கம்மாள், தாமரைச்செல்வி ஆகிய 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 9 பேர் பலத்த காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், முருகையா என்பவர் அங்கு உயிரிழந்தார்.
வழக்கம்போல், தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க, விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள், சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து போன்ற உயரதிகாரிகள் பார்வையிட, ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விதிமீறலாக ஃபேன்சி ரகப் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பட்டாசு ஆலைகளை, தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறுவதாலேயே, இத்தகைய விபத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. பட்டாசு ஆலை உயிரிழப்புக்கள் விஷயத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருப்பதை தமிழக அரசும் கண்டுகொள்ளாமலே இருக்கிறது.
.