ஒரு மனிதன் இறக்கும் தருவாயில், அதுவும் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்திருக்கும் நிலையில், அம்மனிதனின் நெருங்கிய உறவினர்களால், அறிவுப்பூர்வமாக எப்படி யோசிக்கமுடியும்?. உயிரற்ற உடலை எரியூட்டுவதன் வாயிலாக நெருப்புக்கோ, அடக்கம் செய்வதன் மூலமாக மண்ணுக்கோ தருவதைக் காட்டிலும், சில உயிர்களை வாழவைப்பதற்காக, உறுப்புதானத்தின் உன்னதத்தை உணர்ந்து, மூளைச்சாவு அடைந்த மனிதனின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுப்பதற்கு, எத்தகைய பரந்த மனது வேண்டும்?. அத்தகைய மனதுடன், செயற்கரிய நற்செயலை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விருதுநகரில் நிகழ்த்தியிருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளியான ராமர், செப்டம்பர் 30ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மரியதாஸ் – மாரியம்மாள் தம்பதியரின் மகனான ராமருக்கு துளசிமணி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ராமரை, பின்பு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், ராமர் மூளைச்சாவு அடைந்ததை, மருத்துவக் குழுவினர் அக்டோபர் 4ஆம் தேதி உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, ராமரின் உடல் உறுப்புகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்க, அவருடைய உறவினர்கள் சம்மதித்தனர்.
மூளைச்சாவு அடைந்த ராமரின் உடலில் இருந்து கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகியவற்றை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தானமாகப் பெற்றுக்கொண்டது. தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகள் உடனடியாக 6 பேருக்கு பொருத்தப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் உடலுறுப்புகளைத் தானமாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றது இதுவே முதல் முறையாகும். ராமரின் உடல் உறவினர்களிடம் அரசு மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டது. நெகிழ்ச்சியான இந்நிகழ்வில், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயசிங், மருத்துவர்கள் சையத் பஹாவுதீன் உசேனி, சேகர், கண்காணிப்பாளர் லதா, உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது சுல்தான் இப்ராஹிம், ஒருங்கிணைப்பாளர் ஜெகப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.