Skip to main content

மீன் துள்ளாமல் இருக்க வாயில் கவ்விய இளைஞர்! தொண்டையில் சிக்கியதால் மரணம்

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது கீழ்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் அரிகண்டன்.  20 வயது இளைஞரான இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.   அவரது ஊரின் அருகிலுள்ள கணக்கன் குப்பம் கிராமத்தில் ஒரு இரும்புப் பட்டறையில் வேலை செய்து வருகிறார். தற்போது கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசு போடப்பட்டுள்ள தடையால் முடக்கப்பட்டு எல்லோரும் வீடுகளில் முடங்கி இருப்பதுபோல அரி கண்டனும் வீட்டில் இருந்துள்ளார்.

  f


வீட்டில் சும்மாவே இருப்பது போரடிக்கிறது என்று தமிழகத்தில் இவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீட்டுக்கு தெரியாமல், காவல்துறைக்கு தெரியாமல் ஆங்காங்கே டூவீலர்களில் ஊர் சுற்றுகிறார்கள்.  ஆனால் மணிகண்டன் அதுபோல் செய்யாமல் தனது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதற்காக ஏரிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.  மீன் பிடிப்பது பொழுதுபோக்குதான் என்று நினைத்தாலும்,  மீனைக் கொண்டு சமைத்தும் சாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு நேற்று அவர்கள் ஊருக்கு அருகிலுள்ள  அருங்குணம் கிராமத்தில் உள்ள ஏரிக்குச் சென்று தனது நண்பர்களுடன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது தூண்டிலில் ஒரு மீன் மாட்டிக்கொண்டது.  அதை கண்டு சந்தோசம் அடைந்த அரிகண்டன், அந்த மீனை எடுத்து தன் அருகில் வைத்து தனது செல்போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார். தூண்டிலில் இருந்து எடுக்கப்பட்ட மீன் தரையில் கிடந்தது.  அது துள்ளி மீண்டும் ஏரியில் விழுந்து விடுமோ என்று அதை எடுத்து தன் வாயில் வைத்து கவ்வியபடி, தூண்டில் முள்ளின் முனை மீது அடுத்த மீனை பிடிப்பதற்காக, மண்புழுவை அதில் மாட்டிக் கொண்டிருந்தார்.  அப்போது அவரது வாயில் கவ்வியிருந்த மீன்நழுவி  அவரது தொண்டைக்குள் சென்று விட்டது. தொண்டையில் சிக்கிய மீனை வெளியே எடுக்க முடியாமல் அரிகண்டன் திணறியுள்ளார்.
 

nakkheeran app



இதைப்பார்த்த  அவரது நண்பர்கள் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அரிகண்டனை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கே மருத்துவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு  தொண்டையில் இருந்த மீனை வெளியே எடுத்தனர். ஆனால் தொண்டையில் சிக்கிய மீனால் ஏற்கனவே அவதிப்பட்டு வந்த அரிகண்டன் மூச்சுத்திணறலால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இறந்துபோனார்.  இந்த செய்தி கீழ்மலை கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்த ஒரு செயலையும் அவை சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் கவனமாக செய்ய வேண்டும். கொஞ்சம் கவனம் சிதறினால் மரணம் என்பதற்கு அரிகண்டனின் கவனக்குறைவு ஒரு எடுத்துக்காட்டு. தூண்டிலில் புழு மாட்டுவதற்கு அதிலிருந்து எடுத்த மீனை மணிகண்டன் ஒரு ஓரமாக பத்திரப்படுத்திவிட்டு தூண்டிலில் மண்புழுவை மாட்டி இருக்கலாம்.  அப்படி செய்து இருந்தால் அவரது உயிர் போயிருக்காது.  இது சம்பந்தமாக அரிகண்டன் தந்தை மண்ணாங்கட்டி அளித்த புகாரின் பெயரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .
    

சார்ந்த செய்திகள்